பொதுத்துறை வங்கிகளில் 12,000 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..

IBPS

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளார்க் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கானத் தேர்வுகளுக்கு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 9ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ஐபிபிஎஸ் :
இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, சின்டிகேட் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பரோடா வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் பணியாற்ற வேண்டும் என்றால் ஐபிபிஎஸ் சார்பில் நடைபெறும் தேர்வில் பங்கேற்று வெற்றி பெறவேண்டியது கட்டாயம். இந்த அமைப்பின் சார்பில் ஐபிபிஎஸ் கிளார்க் பணியிடங்களுக்கான விண்ணப்ப தேதிகளும், தேர்வு தேதிகளும் வெளியிடப்பட்டுள்ளது.

வங்கி கிளார்க் வேலை: 
தற்போது வங்கி தேர்வு வாரியம் சார்பில் வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 1,379 இடங்களும், புதுச்சேரியில் 44, கேரளாவில் 349 இடங்களும் என மொத்தமாக நாடு முழுவதும் 12,074 இடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைனில் மூலம் வரும் செப்டம்பர் 17 முதுல் அக்டோபர் 9 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முதல் நிலைத் தேர்வு:
இத்தேர்வானது முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், முதல்நிலை தேர்வானது (ப்ரிலிமினரிதேர்வு) வரும் டிசம்பர் (2019) 7, 8, 14 மற்றும் 21 ஆகிய தேதிகளிலும், முதன்மைத் தேர்வு (மெயின் தேர்வு) 2020, ஜனவரி 19 ஆம் தேதியும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வுக்கான நுழைவு அட்டை நவம்பரில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண்கள்: 
முதன்மைத் தேர்வு வினாத்தாள் மதிப்பெண்கள் குறித்த விபரங்களும் இதில் இடம்பெற்றுள்ளது. பொது மற்றும் நிதித் துறையில் 50 மதிப்பெண்களும், பொது ஆங்கிலத்தில் 40 மதிப்பெண்கள், பகுத்தறிவு மற்றும் கணினி திறன் - 60 மதிப்பெண்கள், அளவு திறன் - 50 மதிப்பெண்கள் என 200 மதிப்பெண்களுக்கும், முதல் நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கும் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: 
விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே வரவேகப்படுகின்றன. மேலும் முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டிற்கும் சேர்த்து ஒரு முறை பதிவு செய்தாலே போதும். அதாவது விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வுகளுக்கு மீண்டும் பதிவு செய்ய வேண்டியதில்லை.

கல்வி மற்றும் வயது வரம்பு: 
விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். கணினித் திறன் அவசியம். 20 முதல் 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

முக்கியத் தேதிகள்: 
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் - 17 செப்டம்பர் 2019
 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 09 செப்டம்பர் 2019 (மாலை 5) 
தேர்வு பயிற்சி வழங்கும் காலம் - நவம்பர் 2019 
ஆன்லைன் தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிடப்படும் நாள் - நவம்பர் 2019 
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாட்கள் - 7, 8,14 மற்றும் 21 டிசம்பர் 2019 
முதல்நிலைத் தேர்வு முடிவு - 2019 டிசம்பர் / 2020 ஜனவரி
 முதன்மைத் தேர்வு நுழைவுச் சீட்டு (ஆன்லைன் தேர்வு) - ஜனவரி 2020 
ஐபிபிஎஸ் முதன்மைத் தேர்வு தேதி - 19 ஜனவரி 2020

விண்ணப்பக் கட்டணம்:
பொது பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600 எஸ்.சி, எஸ்.டி மற்றும் இராணுவ வீரர்களின் வாரிசுகள் உள்ளிட்டவர்கள் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

முக்கியக் குறிப்புகள்:
ஐபிபிஎஸ் தேர்விற்கு விண்ணப்பிக்கத் தேவைப்படும் ஆவணங்கள் விண்ணப்பதாரரின் புகைப்படம் - jpeg பைல் 20 kb முதல் 50 kb வரை இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் கையொப்பம் - jpeg பைல் 10 kb முதல் 20 kb வரை இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் கட்டைவிரல் பதிவு - jpeg பைல் 20 kb முதல் 50 kb வரை கையால் எழுதப்பட்ட உறுதி வாக்குமூலத்தின் ஸ்கேன் நகல் - jpeg கோப்பில் 50 kb முதல் 100 kb வரை. 

இதுகுறித்தான மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.ibps.in/ அல்லது https://www.ibps.in/crp-clerical-cadre-ix/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.